Breaking News
Loading...
Saturday 22 February 2014

Info Post
காயம் காரணமாக ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து கேப்டன் மகேந்திர சிங் தோனி விலகியுள்ளார். அதனால், அணியை வழிநடத்தும் வாய்ப்பை இளம் வீரரான விராட் கோலி பெற்றார்.
இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வியாழக்கிழமை விடுத்த செய்திக் குறிப்பில், "ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தில் வரும் 25-ம் தேதி தொடங்குகிறது. நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டின்போது ஏற்பட்ட காயம் காரணமாக இத்தொடரிலிருந்து தோனி விலகுகிறார். அடுத்த 10 நாள்களுக்கு தோனி சிகிச்சை மேற்கொள்ள உள்ளார். தோனிக்குப் பதிலாக தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் அணியில் சேர்க்கப்பட்டார். அணியை விராட் கோலி வழிநடத்துவார்' என்று தெரிவிக்கப்பட்டது.
வெளிநாட்டுத் தொடர்களில் இந்திய அணி படுதோல்விகளைச் சந்தித்து வருவது தொடர் கதையாகிவிட்டது. அதனால், கேப்டன் எனும் நிலையில் தோனி கடும் விமர்சனத்துக்குள்ளானார். தோனியை கேப்டன் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் காயம் காரணமாக தோனி விலகியுள்ளது பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆசிய கோப்பை தொடரில் கோலி தலைமையிலான இந்திய அணி சிறப்பாகச் செயல்படும் பட்சத்தில் தோனிக்கு மீண்டும் கேப்டன் பதவி கிடைக்குமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தாயகம் திரும்பியது இந்திய அணி
நியூஸிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு இந்திய அணி புதன்கிழமை தாயகம் திரும்பியது.
புதன்கிழமை இரவு மும்பை விமானநிலையத்தை வந்தடைந்த வீரர்கள், அங்கிருந்து தங்களது மாநிலங்களுக்கு வெவ்வேறு விமானங்களில் புறப்பட்டுச் சென்றனர்.வங்கதேசத்தில் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 25-ம் தேதி முதல் மார்ச் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் போட்டியிடுகின்றன.
இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் (பிப்ரவரி 26) வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. இத்தொடரில் கலந்து கொள்வதற்காக இந்திய அணி வரும் 23-ம் தேதி வங்கதேசத்துக்கு புறப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment