Breaking News
Loading...
Saturday 22 February 2014

Info Post
சவூதி அரேபியாவில் வாடும் இந்தியர்களுக்கு உதவுவது குறித்து ரியாத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் எஸ். ஹைதர் அலீ விடுத்துள்ள அறிக்கை:
சட்ட மீறலாகவும், உரிய பணி ஆவணமின்றியும் சவூதி அரேபியாவில் தங்கி விட்ட அயல்நாட்டவர்கள்  நாட்டை விட்டு வெளியேறவோ, ஆவணங்களை நல்ல முறையில் சரிசெய்துகொள்ளவோ சவூதி அரசு அறிவித்துள்ள சலுகைக் காலம் வேகமாகக் கடந்துகொண்டிருக்கிறது. இன்னமும் பத்துக்கும் குறைவான நாள்களே உள்ள நிலையில், குடிமை அனுமதியின்மையோ, பணிச் சிக்கலோ உள்ள இந்தியர்கள் யாரேனும் இருந்தால் விரைந்து செயற்பட்டு எவ்வித அபராதமோ தண்டனையோ இன்றி தங்கள் நிலையை சட்டத்திற்குட்படும் வகையில் திருத்திக் கொள்ளவோ அல்லது தூதரக உதவி பெற்று  தாயகம் மீளவோ செய்யலாம் என்று இந்தியத் தூதரகம் பல்வேறு செய்தி அறிக்கைகளின் வழியே கேட்டுக்கொண்டுள்ளது.
ரியாத் தமிழ்ச் சங்கமும் தூதரகத்தின் இந்த வேண்டுகோளை தமிழர்களிடம் இதன்மூலம் மீண்டும் ஒருமுறை சமர்ப்பிக்கிறது. இது தொடர்பாக, தமிழ் அமைப்பு ஒன்றுடன் இணைந்து இரு கூட்டங்கள் நடத்தியும் சகோதரர்களின் பல்வேறு ஐயங்களுங்குத் தீர்வு கண்டுள்ளோம். ரியாத் தமிழ்ச் சங்கத்தின் சமூக சேவைப் பிரிவின் கீழ் அதன் தொண்டர்கள் பலரும் துயருறும்; வழிதேடும் இந்தியச் சகோதரர்களுக்கு பல்வேறு வகைகளில், அலுவல் மையங்களில் சகோதர உணர்வுடன் உதவி வருகிறார்கள்.
இந்நிலையில், தாயகம் திரும்பத் துடிக்கும், சட்ட ஆவணமின்றி அதிக நாள்கள் தங்கி விட்ட  சகோதரர்கள் தர்ஹீல் எனப்படும் வெளியேற்று மைய அலுவலகத்தின் முன்பு கடும்வெயிலில் நாள்கணக்கில் மணிக்கணக்கில் காத்திருக்கவேண்டிய சூழலும் நிலவுகிறது. அத்தகைய சகோதரர்களுக்கு உணவளிக்கவும்,தாகம் தணிக்கவும்  ரியாத் தமிழ்ச் சங்க உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் முதல் தம்மை வெளிப்படுத்திக்கொள்ள விரும்பாதவர்கள் ஈறாக பலரும் உதவி வருகிறார்கள்.எங்களுக்கு இந்நற்காரியத்தில் உதவிய, உதவி வருகிற அனைத்துச் சகோதரர்களுக்கும் இந்நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
சலுகைக் காலம் ஜூலை 3 வரை இருப்பதால், ஜூலை 3 வரை நீடிக்க உள்ள இந்நற்காரியத்தில் பங்களித்து இறையருளைப் பெற விரும்பும் யாரும்  எங்கள் நிர்வாகக்குழுவினரையோ, சமூக சேவைப் பிரிவையோ தொடர்புகொண்டு உதவி செய்யலாம் என்பதை அறியத் தருகிறோம். உயரிய இந்நோக்கத்திற்காகப் பெறப்படும் உதவிகள் தரப்பட்ட நோக்கத்திற்கு மட்டுமே செலவிடப்படும் என்பதையும் உறுதி கூறுகிறோம்.
- இவ்வாறு ரியாத் தமிழ்ச் சங்கம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

0 comments:

Post a Comment