Breaking News
Loading...
Saturday 22 February 2014

Info Post
கோபால்பட்டி: திண்டுக்கல் அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டை வேடிக்கை பார்த்த பள்ளி மாணவன் காளை முட்டியதில் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தான். மேலும் 23 காளைபிடி வீரர்கள் காயமடைந்தனர். திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள தவசிமடையில் புனித உத்திரியமாதா கோயில் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதன் முக்கிய நிகழ்ச்சியான ஜல்லிக்கட்டு நேற்று நடைபெற்றது. இதில் மதுரை, திருச்சி, திண்டுக்கல், புதுக் கோட்டை, பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. 

காளைகளை அடக்குவதற்கு 150க்கும் மேற்பட்ட இளைஞர்கள் களம் இறங்கினர். ஊர் வழக்கப்படி முதலில் கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதனை தொடர்ந்து முரட்டுக் களைகள் கிட்டிவாசல் வழியாக ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. காளைகளை அடக்குவதற்கு இளைஞர்கள் முற்படும் போது பல காளைகள் பாய்ந்து ஓடியது. இதில், மாடுபிடி வீரர்கள் 23 பேர் காயம் அடைந்தனர். இந்த ஜல்லிக்கட்டை வேடிக்கை பார்க்க சென்ற எமக்கலாபுரத்தை சேர்ந்த பள்ளி மாணவன் சிவக்குமார் (12) காளை ஒன்று முட்டியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். இதுகுறித்து சாணார்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

0 comments:

Post a Comment