Breaking News
Loading...
Tuesday 25 February 2014

Info Post
பாரிஸ்: சந்திரன் மீது மிகப்பெரிய விண்கல் மோதியது. இதற்கு முன்பு இவ்வளவு பெரிய மோதல் ஏற்பட்டதில்லை என்று ஸ்பெயின் விஞ்ஞானி கூறியுள்ளார்.
ஸ்பெயின் நாட்டின் ஹூலிவா பல்கலைக்கழக பேராசிரியர் ஜோஸ் மரியா மடிடோ. இவர் தலைமையிலான விண்வெளி ஆய்வு குழுவினர், சந்திரன் மீது மிகப்பெரிய விண்கல் மோதியதை பார்த்துள்ளனர். இதுகுறித்த ஆராய்ச்சி கட்டுரையை ராயல் விண்வெளி ஆய்வு சொசைட்டியின் மாதாந்திர இதழ் வெளியிட்டுள்ளது. அதில் ஜோஸ் மரியா மடிடோ கூறியிருப்பதாவது: கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 11ம் தேதி 2 அதிநவீன டெலஸ்கோப்கள் மூலம் சந்திரனை ஆய்வு செய்து கொண்டிருந்தேன். அப்போது பிரிட்ஜ் சைசில் இருந்த மிகப் பெரிய விண்கல் ஒன்று, சந்திரன் மீது பயங்கரமாக மோதி வெடித்து சிதறியது. அதனால் தீப்பிழம்பு ஏற்பட்டது. அந்த நேரத்தில் வானத்தை யாராவது பார்த்திருந்தால், வெறும் கண்களாலேயே அந்த காட்சியை பார்த்திருக்க முடியும். அந்தளவுக்கு ஒளிப்பிழம்பு ஏற்பட்டது.

என்னுடைய பல ஆண்டு ஆராய்ச்சியில் இதுபோல் ஒரு பயங்கர மோதலை கண்டதில்லை. இது அதிகாலை 1.30 மணிக்கு நடந்தது. சந்திரன் மீது விண்கல் மோதி ஏற்பட்ட தீப்பிழம்பு 8 வினாடிகள் நீடித்தது. அதன்பின் ஆவியாகி விட்டது. இதுபோல் சந்திரன் மீது விண்கல் மோதுவது மிகவும் அரிதானது. சந்திரன் மீது மோதிய விண்கல் 400 கிலோ எடை இருக்கும். 60 செ.மீ. சுற்றளவும் 1.40 மீட்டர் நீளமும் கொண்டது. மணிக்கு 61 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் அந்த விண்கல் சந்திரன் மீது மோதியது. 15 டன் டிஎன்டி வெடிபொருள் வெடித்து சிதறினால் என்ன விளைவை ஏற்படுத்துமோ அந்தளவுக்கு சந்திரன் மீது விண்கல் வெடித்து சிதறியது. இவ்வாறு மடிடோ கூறியுள்ளார். சந்திரன் மீது விண்கல் மோதிய காட்சிகளை யூ டூபில் மடிடோ வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment