Breaking News
Loading...
Tuesday 15 April 2014

Info Post
சென்னை,
நடிகர் வடிவேலு நடித்துள்ள தெனாலிராமன் படத்தை வெளியிட தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கை வேறு நீதிபதிகள் கொண்ட டிவிஷன் பெஞ்சுக்கு மாற்றி ஐகோர்ட்டு தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு தெலுங்கு மக்கள் பேரவையின் நிறுவனர் தலைவர் பாலகுருசாமி, தமிழ்நாடு தெலுங்கு யுவசக்தி அமைப்பின் தலைவர் கே.ஜெகதீஸ்வர ரெட்டி ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–
தெனாலிராமன்
நடிகர் வடிவேலு நடித்துள்ள ‘தெனாலிராமன்’ என்ற படத்தை ஏ.ஜி.எஸ். எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில், சக்கரவர்த்தி கிருஷ்ணதேவராயரை நகைசுவையாக சித்தரித்துள்ளனர். இதனால், தெலுங்கு பேசும் மக்கள் மிகப்பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
இதையடுத்து, தெனாலிராமன் படத்தை, தெலுங்கு மக்களின் பிரதிநிதிகளுக்கு திரையிட்டு காட்டவேண்டும் என்றும் ஏ.ஜி.எஸ். நிறுவனத்துக்கு வக்கீல் நோட்டீசு அனுப்பினோம். இதற்கு பதிலளித்த அந்த நிறுவனம், ‘கிருஷ்ணதேவராயரை பற்றி தவறாகவும், நகைசுவையாகவும் சித்தரித்து படம் எடுக்கப்படவில்லை’ என்று கூறியுள்ளனர்.
ஆனால், கிருஷ்ணதேவராயர், தெனாலிராமன் ஆகியோரது வாழ்க்கை வரலாற்றை பற்றித்தான் இந்த படத்தின் கதை அமைந்துள்ளது என்று தெரியவருகிறது.
தடை விதிக்க வேண்டும்
நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான், ‘வடிவேலுவுக்கு ஏதாவது பிரச்சினை வந்தால், அவர்களை நாங்கள் பாதுகாப்போம்’ என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தெலுங்கு மக்களை அவதூறாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிருஷ்ணதேவராயர் வரலாற்றின் உண்மைகள் மறைக்கப்பட்டு எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் வெளியானால், தமிழகத்தில் தேவையில்லாத சாதி மோதல் ஏற்பட்டு, சட்டம்–ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்த திரைப்படம் வருகிற 18–ந் தேதி வெளியாக உள்ளது. எனவே தெனாலிராமன் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். இந்த படத்தை தெலுங்கு அமைப்புகள் அல்லது இந்த ஐகோர்ட்டு நியமிக்கும் அதிகாரிகள் முன்பு திரையிட்டு காட்டும்படி, தெனாலிராமன் படத்தின் தயாரிப்பாளருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விசாரிக்க மறுப்பு
இந்த மனு தலைமை நீதிபதி (பொறுப்பு) சத்தீஷ்குமார் அக்னிகோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த வழக்கை தாங்கள் விசாரிக்க விரும்பவில்லை என்றும், வேறு நீதிபதிகள் கொண்ட டிவிஷன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

0 comments:

Post a Comment