Breaking News
Loading...
Friday 25 April 2014

Info Post
துபாய்,
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பையை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3-வது வெற்றியை ருசித்தது.
ஹஸ்சி ஒரு ரன்
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு துபாயில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்சும், சென்னை சூப்பர் கிங்சும் பலப்பரீட்சை நடத்தின. சென்னை அணியில் மாற்றம் ஏதும் இல்லை. மும்பையில் ஜஸ்பிரித் பம்ராவுக்கு பதிலாக சிதம்பரம் கவுதம் சேர்க்கப்பட்டார்.
இதில் டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த மும்பைக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் மைக் ஹஸ்சி (1 ரன், 7 பந்து), ல்பனாசின் பந்து வீச்சில் ‘கிளீன் போல்டு’ ஆனார். இன்னொரு தொடக்க வீரர் ஆதித்ய தாரே 23 ரன்னில் (19 பந்து, 4 பவுண்டரி) ஆட்டம் இழந்தார்.
142 ரன்கள் இலக்கு
இதன் பின்னர் கோரி ஆண்டர்சனும், கேப்டன் ரோகித் ஷர்மாவும் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்க போராடினர். ஸ்கோர் மந்தமாகவே நகர்ந்தது. 10 ஓவரில் அந்த அணி 2 விக்கெட்டுக்கு 57 ரன்களே எடுத்திருந்தது.
பிற்பாதியில் மும்பை வீரர்கள் ரன் சேகரிப்பில் துரிதம் காட்டினர். அணியின் ஸ்கோர் 109 ரன்களை எட்டிய போது கோரி ஆண்டர்சன் 39 ரன்களில் (31 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) அஸ்வினால் ரன்-அவுட் செய்யப்பட்டார். அடுத்த சில ஓவர்களில் மும்பையின் ரன்வேகத்தை சென்னை பவுலர்கள் வெகுவாக கட்டுப்படுத்தினர். அரைசதம் அடித்த கையோடு ரோகித் ஷர்மா (50 ரன், 41 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) நடையை கட்டினார். இதைத் தொடர்ந்து 19-வது ஓவரை வீசிய வேகப்பந்து வீச்சாளர் மொகித் ஷர்மா அந்த ஓவரில் பொல்லார்ட் (12 ரன்), அம்பத்தி ராயுடு (1 ரன்), ஹர்பஜன்சிங் (0) ஆகிய 3 பேரை காலி செய்து மேலும் இறுக்கினார். கடைசி ஓவரில் சிதம்பரம் கவுதம் அடித்த பவுண்டரியும், ஜாகீர்கான் அடித்த சிக்சரும் மும்பை அணி 140 ரன்களை தொட வைத்தது.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மும்பை அணி 7 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்தது. சென்னை தரப்பில் மொகித் ஷர்மா 4 விக்கெட்டுகளும், ல்பனாஸ் 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.
சென்னை அணி வெற்றி
தொடர்ந்து 142 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணியில் தொடக்க ஆட்டக்காரர் வெய்ன் சுமித் 4 சிக்சருடன் 29 ரன்னிலும் (22 பந்து), அடுத்து வந்த ரெய்னா 1 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.
மறுமுனையில் இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் பிரன்டன் மெக்கல்லம் அபாரமாக விளையாடி அரைசதத்தை கடந்து வெற்றிப்பாதைக்கு வித்திட்டார். அவருக்கு டு பிளிஸ்சிஸ் (20ரன்) ஒத்துழைத்தார்.
இதன் பின்னர் பிரன்டன் மெக்கல்லமும், கேப்டன் டோனியும் இணைந்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர். சென்னை அணி 19 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிரன்டன் மெக்கல்லம் 71 ரன்களுடனும் (53 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்), டோனி 14 ரன்களுடனும் (ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் நின்றனர்.
மும்பைக்கு 3-வது தோல்வி
4-வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணி தொடர்ச்சியாக பெற்ற 3-வது வெற்றி இதுவாகும். ஏற்கனவே டெல்லி, ராஜஸ்தான் அணிகளை தோற்கடித்து இருந்தது.
இந்த ஆண்டில் வெற்றியே காணாத ஒரே அணியான நடப்பு சாம்பியன் மும்பைக்கு இது 3-வது தோல்வியாகும்.

0 comments:

Post a Comment