Breaking News
Loading...
Saturday 19 April 2014

Info Post
சனிக்கிரகத்தை சுற்றும் துணைக்கோள்களில் ஒன்றான என்செலாடஸில் உறைபனி மூடிய அதன் மேற்பரப்புக்கு கீழே திரவ நீர்நிலை ஒன்று இருப்பதற்கான புதிய ஆதாரங்கள் தற்போது கிடைத்துள்ளன.

இந்த குட்டிக் கிரகத்தின் தென் துருவத்தில் வரிவரியாகத் தோன்றும் ஒரு இடத்தில் இருந்து உறைபனியாலான துகள்கள் போலத் தோன்றிய பொருட்கள் பீய்ச்சியடித்ததை விஞ்ஞானிகள் கண்ட காலம்தொட்டே அவர்கள் இது தொடர்பில் உற்சாகம் அடைந்திருந்தனர்.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாஸாவின் கஸ்ஸினி என்ற விண்கலம் இந்த துணைக்கோளின் மேலே பறந்து செல்கையில் அது சேகரித்த தகவல்களை தற்போது ஆராய்ந்துள்ள விஞ்ஞானிகள் இந்த துணைக்கோளில் திரவ நீர் இருப்பதற்கான அறிகுறிகளை அக்கோளின் ஈர்ப்பு சக்தி பற்றிய விவரங்களில் கண்டுள்ளதாக கூறுகின்றனர்.
வட அமெரிக்காவில் இருக்கும் லேக் சுப்பீரியர் என்ற ஏரியின் அளவுக்கு தண்ணீரைக் கொண்டுள்ள நீர் நிலை ஒன்று இந்த துணைக்கோளில் இருப்பதற்கான அடையாளங்களை இந்த தரவுகள் காட்டுகின்றன.
சூரிய குடும்பத்தில் பூமிக்கு வெளியே நுண்ணுயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுள்ள ஒரு இடம் என்று பார்த்தால் அது என்செலாடஸாக இருக்க முடியும் என்ற பேராசிரியர் லெஸ் மற்றும் அவரது அணியினரின் நம்பிக்கைக்கு வலுசேர்ப்பதாக இந்தப் புதிய தரவுகள் அமைந்துள்ளன.
என்செலாடஸின் மேற்பரப்புக்கு கீழே நாற்பது கிலோமீட்டர் அடியில் இந்த திரவ நீர்நிலை இருக்கலாம் என இத்தரவுகள் குறிப்புணர்த்துகின்றன.
என்செலாடஸைச் சுற்றியுள்ள வாயு மண்டலத்தில் நீராவில் கலந்திருக்க வாய்ப்புள்ளது என கஸ்ஸினி விண்கலம் 2005ஆம் ஆண்டு கண்டதில் இருந்தே, அந்த கோளின் மேற்பரப்பில் உள்ள உறைபனிக்கு கீழே திரவ வடிவில் நீர் இருக்கலாம் என்ற ஊகங்கள் வலுப்பெற்றன.
பிற்பாடு இந்த வாயு மண்டலத்தில் நீராவி கலந்திருக்க காரணம் இத்துணைக்கோளின் மேற்பரப்பில் வரிவரியாக காணப்படும் பிளவுகளில் இருந்து நீராவி பீய்ச்சியடிக்கப்படுவதுதான் என்று கண்டுபிடிக்கப்பட்டது.
பீய்ச்சியடிக்கப்படும் நீராவியில் ஊடாகப் பறந்து, அவற்றில் உப்புக் கரிக்கிறதா கரிமம் செறிந்த இரசாயணங்கள் இருக்கின்றனவாக என்று கஸ்ஸினி ருசிபார்த்தும் இருந்தது.
நீராவி பீய்ச்சியடிக்கப்படுவதன் காரணம் என்னவென்று இன்னும் முழுமையான புரிதல் நமக்கு இல்லை.
சனிக்கிரகத்தை மையத்தில் கொண்ட ஒரு வட்டப்பாதையில் என்செலாடஸ் சுற்றிவரவில்லை, மாறாக சனிக்கிரகத்தை பாதிநேரம் அருகிலும் பாதி நேரம் தொலைவிலும் கொண்டிருக்கக்கூடிய ஒரு நீள்வட்டப் பாதையில் இந்த துணைக்கோள் பயணிக்கிறது. எனவே இந்த துணைக்கோளின் மீது சனிக்கிரகத்தின் ஈர்ப்புசக்தி சில காலம் குறைவாகவும் சில காலம் அதிகமாகவும் இருக்கிறது.
புவியீர்ப்பு சக்தியின் மாறுதல்களின் காரணமாக உறைபனி உருகி வாயுமண்டலத்தில் பீய்ச்சியடிக்கப்படுவதாக கருதப்படுகிறது.
என்செலாடஸின் தென் துருவத்தை ஒட்டிய இடங்களில் எட்டு கிலோமீட்டர் முதல் பத்து கிலோமீட்டர் வரை ஆழமான நீர் நிலை ஒன்று மேற்பரப்புக்கு அடியில் அமைந்துள்ளது என தற்போது கிடைத்துள்ள ஈர்ப்புசக்தி தரவுகள் குறிப்புணர்த்துகின்றன.

0 comments:

Post a Comment