Breaking News
Loading...
Wednesday 23 April 2014

Info Post

ஷார்ஜா,
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 72 ரன்களில் வித்தியாசத்தில் ஐதராபாத் சன் ரைசர்சை தோற்கடித்து 3–வது வெற்றியை பெற்றது. இதில் கிளைன் மேக்ஸ்வெல்லின் அதிரடி ஜாலத்தின் (43 பந்தில் 9 சிக்சருடன் 95 ரன்) உதவியுடன் பஞ்சாப் நிர்ணயித்த 194 ரன் இலக்கை நோக்கி ஆடிய ஐதரபாத் அணி 19.2 ஓவர்களில் 121 ரன்களுக்கு சுருண்டது.
மேக்ஸ்வெல் ஏற்கனவே முதல் இரு ஆட்டங்களில் முறையே 95 மற்றும் 89 ரன்கள் எடுத்திருந்தார். இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் தொடர்ந்து மூன்று ஆட்டங்களில் 80 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் வீரர் என்ற புதிய சாதனையை படைத்தார். 70 ரன்களுக்கு மேலாக கூட இவ்வாறு தொடர்ந்து மூன்று இன்னிங்சில் எந்த வீரரும் இதற்கு முன்பு கடந்ததில்லை. அதிக ரன்கள் குவிப்பில் முதலிடம் வகிப்பதால் ஆரஞ்சு நிற தொப்பி இப்போது அவரது தலையை அலங்கரித்துக் கொண்டிருக்கிறது.
தோல்விக்கு பிறகு ஐதராபாத் கேப்டன் ஷிகர் தவான் கூறுகையில், ‘இந்த ஆட்டத்தில் நாங்கள் நிறைய கேட்ச்சுகளை நழுவ விட்டோம். குறிப்பாக மேக்ஸ்வெல்லின் கேட்ச்சை (11 ரன்னில் இருந்த போது டேவிட் வார்னர் கோட்டை விட்டார்) தவற விட்டது பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. அதன் பிறகு அவர் நிறைய ரன்கள் குவித்து விட்டார். கடினமான இலக்கை நோக்கி பேட் செய்த போது, விக்கெட்டுகளை மளமளவென இழந்ததால் நெருங்க முடியவில்லை. 190 ரன்களுக்கு மேலான ஸ்கோரை துரத்தும் போது, பேட்ஸ்மேன்கள் கூடுதல் பொறுப்புடன் அதே வேளையில் ‘ரிஸ்க்’ எடுத்து விளையாட வேண்டும். மொத்தத்தில் இது மிகப்பெரிய பேட்டிங் சொதப்பலாகும். பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தி, நிறைய ரன்கள் எடுக்க வேண்டியது அவசியமாகும். கடினமாக உழைத்து வலுவான அணியாக மீண்டெழுவோம்’ என்றார்.
பஞ்சாப் கேப்டன் ஜார்ஜ் பெய்லி கூறும் போது, ‘நல்ல ஸ்கோரை எட்டியதை பார்ப்பதற்கு மகிழ்ச்சிகரமாக இருந்தது. ஷேவாக்கும், புஜாராவும் சிறப்பான தொடக்கம் தந்தனர். ரன் எடுப்பதற்கு ஆடுகளம் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. ஆனால் மேக்ஸ்வெல்லிடம் இருந்து இந்த மாதிரியான ஒரு பேட்டிங் வெளிப்படும் என்று நீங்கள் எதிர்பார்த்து இருக்க மாட்டீர்கள். ஆனால் ஒவ்வொரு முறையும் அவர் இவ்வாறு ரன் குவிக்க முடியாது என்பதை அறிவோம். மற்றவர்களும் தங்கள் பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டும்’ என்றார்.

0 comments:

Post a Comment