Breaking News
Loading...
Wednesday 23 April 2014

Info Post
துபாய்,
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை அணி 2–வது வெற்றியை சுவைத்தது.
ஐ.பி.எல். கிரிக்கெட்
7–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர், ஐதராபாத் சன் ரைசர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே–ஆப்’ என்ற அடுத்த சுற்றில் அடியெடுத்து வைக்கும்.
இந்த நிலையில் துபாயில் நேற்றிரவு நடந்த 10–வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்சும், ராஜஸ்தான் ராயல்சும் மோதின.
சுமித் அரைசதம்
டாஸ் ஜெயித்த ராஜஸ்தான் கேப்டன் ஷேன் வாட்சன் முதலில் சென்னை அணியை பேட் செய்ய அழைத்தார். இதன்படி பிரன்டன் மெக்கல்லத்துடன் இணைந்து வெய்ன் சுமித் பவுண்டரியுடன் சென்னை அணியின் இன்னிங்சை தொடங்கி வைத்தார். ஓரளவு நல்ல தொடக்கம் தந்த இந்த ஜோடி 6–வது ஓவரின் 2–வது பந்தில் பிரிந்தது. ஜேம்ஸ் பவுல்க்னெரின் பந்து வீச்சை பிரன்டன் மெக்கல்லம் (6 ரன், 10 பந்து) தூக்கியடித்த போது அதை பிடிக்க அபிஷேக் நாயர், ஸ்டூவர்ட் பின்னி, ஸ்டீவன் சுமித் மூவரும் ஓடி வந்தனர். இதனால் அவர்கள் மோதி விடுவார்களோ? என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் பதற்றமடைய, ஸ்டீவன் சுமித் அலாக்காக கேட்ச் செய்து ரசிகர்களின் பாராட்டுகளை அள்ளினார். அடுத்து சுரேஷ் ரெய்னா களம் இறங்கினார்.
அதே ஓவரின் எஞ்சிய 4 பந்துகளையும் வெய்ன் சுமித் பவுண்டரியாக்கி அசத்தினார். 6 ஓவர்களில் சென்னை அணி 51 ரன்களை தொட்டது. ஸ்டூவர்ட் பின்னியின் ஓவரில் சிக்சர் அடித்து அரைசதத்தை கடந்த சுமித் (50 ரன், 28 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) அதற்கு அடுத்த பந்தில் கேட்ச் ஆனார்.
டோனி 5 ரன்
ஆனால் இதைத் தொடர்ந்து சென்னை அணியின் உத்வேகம் எதிர்பாராத விதமாக தடம் மாறி போனது. கிடைத்த நல்ல தொடக்கத்தை பயன்படுத்த தவறிய மிடில் வரிசை பேட்ஸ்மேன்கள் ‘ஏதோ கோட்டையை பிடிக்கப் போகிறோம்’ என்பது போல் அவசரகதியில் விளையாடி விக்கெட்டுகளை தாரை வார்த்து, அணியையும் நிலைகுலைய வைத்து விட்டனர். ரெய்னா 4 ரன்னில்(9 பந்து) நடையை கட்டினார்.
பின்னர் ஜோடி சேர்ந்த பாப் டு பிளிஸ்சிஸ், கேப்டன் டோனி ஜோடியும் நிலைக்கவில்லை. டோனி, நேர் எதிராக அடித்த பந்தை பவுலிங் செய்த ரஜத் பாட்டியா கையால் தட்டிவிட அது எதிர்முனை ஸ்டம்பை தாக்கியது. அப்போது எதிர்முனையில் டு பிளிஸ்சிஸ் (7 ரன்) கிரீசை விட்டு வெளியே நின்றதால் பரிதாபமாக ரன்–அவுட் ஆனார். டோனியும் (5 ரன், 8 பந்து) நிலைமையை உணர்ந்து ஆடாமல் விக்கெட்டை எளிதாக பறிகொடுத்து விட்டு பெவிலியன் திரும்பினார். 74 ரன்னுக்குள் (11.1 ஓவர்) 5 விக்கெட்டுகளை இழந்து சென்னை அணி பரிதவித்தது.
அடுத்து வந்த வீரர்களால் விக்கெட் சரிவை தடுத்து நிறுத்த முடிந்ததே தவிர, ஸ்கோரை ராக்கெட் வேகத்தில் உயர்த்த முடியவில்லை. இதனால் ஆட்டம் அப்படியே ராஜஸ்தானின் கட்டுப்பாட்டிற்குள் சென்றது. 6–வது விக்கெட்டாக மிதுன் மன்ஹாஸ் 10 ரன்களில் (10 பந்து) கேட்ச் ஆனார்.
இதன் பின்னர் 7–வது விக்கெட்டுக்கு ரவீந்திர ஜடேஜாவும், அஸ்வினும் கைகோர்த்து இறுதிவரை தாக்குப்பிடித்து களத்தில் நின்றனர். ஆனாலும் ஆட்டம் ரசிக்கவில்லை. கடைசி 6 ஓவர்களில் பந்து இரு முறை மட்டுமே எல்லைக்கோட்டை தொட்டது. ஆடுகளத்தின் தன்மை வேகமின்றி (ஸ்லோ) காணப்பட்டதும், பேட்ஸ்மேன்களுக்கு பாதகமாக அமைந்து விட்டது.
141 ரன்கள் இலக்கு
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் சென்னை அணி 6 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்தது. இந்த சீசனில் சென்னை அணியின் குறைந்த பட்ச ஸ்கோர் இதுவாகும். ரவீந்திர ஜடேஜா 36 ரன்களுடனும் (33 பந்து, 2 பவுண்டரி), அஸ்வின் 9 ரன்னுடனும் (13 பந்து, ஒரு பவுண்டரி) ஆட்டம் இழக்காமல் இருந்தார்கள். ராஜஸ்தான் தரப்பில் ரஜத் பாட்டியா 2 விக்கெட்டுகளும், ஸ்டூவர்ட் பின்னி, பிரவின் தாம்பே, ஜேம்ஸ் பவுல்க்னெர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். சென்னை அணிக்கு எக்ஸ்டிரா வகையில் 11 வைடு உள்பட 13 ரன்கள் கிடைத்தது.
பின்னர் 141 ரன்கள் இலக்கை நோக்கி களம்புகுந்த ராஜஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு சென்னை பவுலர்கள் பதிலடி கொடுத்தனர். தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் நாயர் (5) ரன்–அவுட் ஆக, அதைத் தொடர்ந்து சென்னை சுழற்பந்து வீச்சாளர்கள் வீசிய வலையில் சிக்கி ராஜஸ்தான் பேட்ஸ்மேன்கள் விழி பிதுங்கினர். ரஹானே (15 ரன்), கேப்டன் ஷேன் வாட்சன் (7 ரன்), சஞ்சு சாம்சன் (16 ரன்), ஸ்டீவன் சுமித் (19 ரன்) ஆகியோர் சுழலுக்கு இரையானார்கள். இதற்கிடையே ஸ்டூவர்ட் பின்னியும் (8 ரன்) நீடிக்கவில்லை.
சென்னை வெற்றி
அடுத்தடுத்து விக்கெட் வீழ்ச்சியால் நெருக்கடிக்குள்ளான ராஜஸ்தான் அணி மீள்வதற்கு கடுமையாக போராடியது. கடைசி நேரத்தில், ரஜத் பாட்டியாவும், தவால் குல்கர்னியும் சிறிது நேரம் பயமுறுத்தினர். இதில் ரஜத் பாட்டியா 23 ரன்னில் (20 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனார். இதையடுத்து கடைசி ஓவரில் ராஜஸ்தானின் வெற்றிக்கு 24 ரன்கள் தேவைப்பட்டது. 20–வது ஓவரை சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் வீசினார். இதில் முதல் 4 பந்துகளில் 2 சிக்சர் உள்பட 15 ரன்கள் எடுக்கப்பட்டதால், பரபரப்பு தொற்றிக் கொண்டது. ஆனால் 5–வது பந்தில் தாம்பே (2 ரன்) ரன்–அவுட் ஆனதால், 7 ரன் வித்தியாசத்தில் சென்னை அணி திரில் வெற்றியை பெற்றது. ராஜஸ்தான் அணி 19.5 ஓவர்களில் 133 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. தவால் குல்கர்னி 28 ரன்களுடன் (19 பந்து, 2 சிக்சர்) களத்தில் இருந்தார். சென்னை தரப்பில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளையும், ஹில்பனாஸ், ஈஸ்வர் பாண்டே, அஸ்வின், மொகித் ஷர்மா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
அடுத்த ஆட்டம்
3–வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணிக்கு இது 2–வது வெற்றியாகும். ஏற்கனவே டெல்லி அணியை வீழ்த்தி இருந்தது. 3–வது லீக்கில் விளையாடிய ராஜஸ்தானுக்கு இது 2–வது தோல்வியாகும்.
சென்னை அணி அடுத்த ஆட்டத்தில் நாளை நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்சை சந்திக்கிறது.

0 comments:

Post a Comment