Breaking News
Loading...
Wednesday 16 April 2014

Info Post
அபுதாபி,
7–வது ஐ.பி.எல். கிரிக்கெட் கொண்டாட்டம் அபுதாபியில் இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் மும்பை–கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.
ஐ.பி.எல். கிரிக்கெட்
இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008–ம் ஆண்டு முதல், ரசிகர்களின் அமோக ஆதரவுடன் நடந்து வருகிறது. பாராளுமன்ற தேர்தல் காரணமாக இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியை முழுமையாக இந்தியாவில் நடத்த முடியவில்லை. இதையடுத்து முதல் 20 ஆட்டங்களை ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், அபுதாபி, ஷார்ஜா ஆகிய இடங்களிலும், எஞ்சிய ஆட்டங்களை மே 2–ந்தேதி முதல் ஜூன் 1–ந்தேதி வரை இந்திய நகரங்களிலும் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதன்படி 7–வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா அபுதாபியில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர், ஐதராபாத் சன் ரைசர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய 8 அணிகள் கலந்து கொள்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே–ஆப் என்ற அடுத்த சுற்றுக்குள் அடியெடுத்து வைக்கும்.
முதல் ஆட்டத்தில் யார்–யார்?
இன்றைய தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்சும், 2012–ம் ஆண்டு சாம்பியன் கவுதம் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்சும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதையொட்டி இவ்விரு அணி வீரர்களும் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற சச்சின் தெண்டுல்கர், மும்பை இந்தியன்ஸ் அணியின் ‘அடையாளம்’ என்ற சிறப்பு அந்தஸ்துடன் அந்த அணியில் தொடருகிறார். வீரர்களுக்கு பல்வேறு யுக்திகளை கற்று கொடுத்து வரும் அவர், நேற்றைய பயிற்சியின் போது சிறிது நேரம் பேட்டிங் செய்தார்.
கடந்த ஆண்டில் தடுமாறிய கொல்கத்தா அணி மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும் முனைப்புடன் தயாராகி வருகிறது. பந்து வீச்சு ஆலோசகர் வாசிம் அக்ரம் மறுபடியும் இணைந்திருப்பது கொல்கத்தா அணிக்கு கூடுதல் தெம்பை அளிக்கிறது.
இவ்விரு அணிகளும் இதுவரை 12 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 10–ல் மும்பையும், 2–ல் கொல்கத்தாவும் வெற்றி பெற்றுள்ளன. இருப்பினும் தற்போது இவ்விரு அணிகளும் சரிசம பலத்துடன் மல்லுகட்டுவதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு குறைவிருக்காது.
வீரர்கள் விவரம்
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:–
கொல்கத்தா: கவுதம் கம்பீர் (கேப்டன்), ராபின் உத்தப்பா, காலிஸ், மனிஷ் பாண்டே அல்லது மன்விந்தர் பிஸ்லா, யூசுப் பதான், கிறிஸ் லின் அல்லது ஷகிப் அல்–ஹசன், பியுஷ் சாவ்லா, வினய்குமார், சுனில் நரின், மோர்னே மோர்கல் அல்லது கம்மின்ஸ், உமேஷ் யாதவ்.
மும்பை: மைக் ஹஸ்சி, ஆதித்ய தாரே, ரோகித் ஷர்மா (கேப்டன்), அம்பத்தி ராயுடு, சிதம்பரம் கவுதம் அல்லது ஜலஜ் சக்சேனா, பொல்லார்ட், கோரி ஆண்டர்சன், ஹர்பஜன்சிங், ஜாகீர்கான், மலிங்கா, பிரக்யான் ஓஜா.
இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. இந்த போட்டிக்கான முதல் வார டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டன. 7 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய வீரர்களின் ஆட்டத்தை நேரில் பார்க்கும் தரிசனம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மக்களுக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கறை மறையுமா?
கடந்த ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சூதாட்ட கறை படிந்ததால், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி இந்த ஆண்டு போட்டியை நடத்தும் பொறுப்பு முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எந்த பிரச்சினையும் இன்றி போட்டியை நடத்துவதே அடுத்த ஒன்றரை மாதங்களுக்கு அவர் முன் நிற்கும் கடுமையான சவாலாகும். அன்னியர்கள் யாரும் நெருங்க முடியாதபடி இந்த முறை வீரர்களுக்கு கடுமையாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

0 comments:

Post a Comment